×

மரக்காணம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயம்

மரக்காணம், மே 10: மரக்காணம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன் (47). இவருக்கு சொந்தமான நாட்டு வெடி பட்டாசுகள், வான வெடிகள், மத்தாப்பு, அவுட் தயாரிக்கும் தொழிற்சாலை அப்பகுதியில் உள்ளது. இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் மரக்காணம், திண்டிவனம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் வெடிப்பதற்காக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கோயில் திருவிழாக்களால் பட்டாசு மற்றும் வான வெடிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. அதிகப்படியான பட்டாசுகளையும், வானவெடிகளையும் சில வாரங்களாக உற்பத்தி செய்து பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். அதன்படி நேற்று வழக்கம்போல் தொழிற்சாலையில் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் 4 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது மதியம் 1 மணியளவில் எதிர்பாராதவிதமாக பட்டாசு தயாரிக்கும் வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஏற்கனவே தயாரித்து வெளியில் காய வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீ பரவி காதை பிளக்கும் அளவு அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளன. இதனால் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் இருந்து கரும்பு புகைமூட்டம் பரவி உள்ளது. இடைவிடாமல் பட்டாசுகள் வெடித்து சிதறிய நிலையில் அவற்றை வேடிக்கை பார்க்கவே முடிந்தது.

பட்டாசு தொழிற்சாலையை ஒட்டி இருந்த தென்னை, மா மரங்களும் கிருகின. அங்கிருந்த வெடிமருந்து பொருட்களும் எரிந்து கருகிக் கிடந்தது. மரக்காணம் தீயணைப்பு நிலையம் மற்றும் கோட்டகுப்பம் காவல் நிலையத்துக்கு உடனே தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி பட்டாசு வெடிக்கும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். பின்னர் உள்ளே சென்ற பார்த்தபோது தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜேந்திரன் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கொழுவாரி கிராமத்தைச் சேர்ந்த கௌரி(45), ஆண்டாள் (37) ஆகிய 3 பேரும் பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்தில் மயங்கி கிடந்தனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராஜேந்திரன், கெளரி இருவரும் புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டாள் கனகசெட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற கோட்டகுப்பம் டிஎஸ்பி சுனில், மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் வெடிவிபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் டிஎஸ்பி சுனில் கூறியதாவது: இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை அனுமதி பெற்று 1999ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜேந்திரன் உள்பட 5 பேர் பணியில் இருந்துள்ளனர். அப்போது பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் திரிகளை இந்த கொட்டையின் எதிரில் உள்ள தென்னை மரங்களுக்கு இடையில் காய வைத்திருந்தனர். இந்த திரிகள் காய வைக்கப்பட்ட இடத்தில் இருந்துதான் தீ விபத்து மற்ற இடங்களுக்கும் பரவி உள்ளது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் 2 பெண்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வருகின்றனர். இந்த விபத்தில் பட்டாசுகள் மட்டுமே வெடித்து சிதறி உள்ளது. ஆனால் கட்டிடங்கள் சேதமாக வில்லை, என்றார். இதனிடையே ஜிப்மரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரன் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு முக்கிய தடயங்களை சேகரித்துவிட்டு சென்றுள்ளனர்.

The post மரக்காணம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து உரிமையாளர் உள்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Rajendran ,Mariyamman Koil Street ,Kiliputhupattu ,Marakanam ,Villupuram ,Dinakaran ,
× RELATED பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த உரிமையாளர் சாவு